follow the truth

follow the truth

August, 21, 2025
HomeTOP2எதிர்காலத்தில், சீனாவிலிருந்து அதிகமான தேயிலை சந்தைக்கு வரும்

எதிர்காலத்தில், சீனாவிலிருந்து அதிகமான தேயிலை சந்தைக்கு வரும்

Published on

தேயிலை உட்பட இலங்கையில் பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்றுவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், அது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சிறந்த வடிவமைப்பாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (15) நடைபெற்ற கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கத்தின் 129 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் பரந்த பங்களிப்பை வழங்குவதற்கு தேயிலை தொழில்துறைக்கு இன்னும் பலம் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அத்துறையில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு, புத்தாக்கத்துடன் அதில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபத ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

தேயிலை உற்பத்தி என்பது அரசாங்க ஆதரவுடன் கட்டமைக்கப்பட்ட தொழில் அல்ல. தனியார் மூலதனத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றவர்களின் தொழில் இது. இதில் சிலர் தோல்வியடைந்தனர். ஆனால் பலர் வெற்றி பெற்றனர். சிலர் விவசாயம் செய்து கொண்டிருந்த காணிகள் கூட சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் கைப்பற்றப்பட்டன.

நாம் தற்போது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தில் பரந்த பங்கை வகிக்கும் பலம் தேயிலைத் தொழிலுக்கு இன்னும் உள்ளது. அடுத்த 20-30 வருடங்களில் கவனம் செலுத்தி இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கண்டறிய வேண்டும்.

உலகளாவிய காலநிலை மாற்றத்தால், எதிர்காலத்தில் நாம் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேயிலை தொழிலைக் காப்பாற்ற, இந்த மிதமான காலநிலை வலயத்தை, காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். சர்வதேச மாநாடுகளில் இது தொடர்பான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளோம்.

2050 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை வளர்ச்சியின் கணிப்புகளைப் பார்க்கும்போது, ​​இந்தியாவின் மக்கள்தொகை மேலும் 400 மில்லியன்களால் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. கென்யா, மலாவி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அதனுடன் இணைந்ததாக அந்த நாடுகளின் தனிநபர் வருமானமும் அதிகரிக்கிறது.

ஆனால் இலங்கையின் சனத்தொகை அதிகரிக்கவில்லை. எனவே, எங்கள் உற்பத்திகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சீனா திட்டமிட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில், சீனாவில் இருந்து அதிகமான தேயிலை சந்தைக்கு வரும். இது உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கும்.

மேலும் இந்தியாவும் தேயிலை சந்தைக்கு வருகிறது. எனவே இந்தியா மற்றும் சீனாவுடன் இது குறித்து கலந்துரையாட வேண்டும். எங்களுக்கு தனியாக பயணிக்க முடியாது. அவர்களின் சந்தைப் போக்கை நீங்கள் கவனமாக நோக்க வேண்டும். உலகின் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகள் தேயிலையை கொள்வனவு செய்து அதை பால் அல்லது பிஸ்கட்டுடன் சேர்த்துத் தயார் செய்து குடிக்கிறார்கள். இன்று, கிரீன் டீ உலகில் பிரபலமான பானமாக மாறிவிட்டது. தேயிலை தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உற்பத்திகள் பற்றி சிந்திக்க வேண்டும்.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் புதிய முகாமைத்துவ நடைமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. இது அனைத்து நவீன டிஜிட்டல் நுட்பங்களையும் உள்ளடக்கிய ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்க வேண்டும்.

அதில் செயற்கை நுண்ணறிவு, உயிரியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளையும் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும். இது தனியார் துறையினரால் உருவாக்கப்பட வேண்டும். லிப்டன் இலங்கைக்கு வரவில்லையென்றால் இன்று இவை எதுவும் இருந்திருக்காது. எனவே, அந்த முறைமையை மேம்படுத்துவதன் மூலம் புதிய தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டுவருவதற்கான வழிகளை அவசரமாக அடையாளங்காண வேண்டும்.

அதற்கு உங்களுக்கு முழு ஆதரவை வழங்குவோம். தேயிலை தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு அதுதான் எம்மால் செய்ய முடியும். அதனுடன் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் செயற்பட்டு வருகின்றோம்.

சர்வதேச ரீதியில் இலங்கை தேயிலையை தூய (pure) தேயிலையாக கொண்டு செல்லும் இலக்கை அடைய சிறந்த தீர்வுகளுடன் தொடர்ந்து செல்வதற்கு உங்களை அழைக்கிறேன். என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...