தீர்வு வழங்கினால் ‘அஸ்வெசும’ பிரச்சினையில் தலையிடத் தயார்

274

சேவைப் பிரமாணக் குறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினால் ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகள் தொடர்பான பிரச்சினையில் தலையிடத் தயார் என கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக ரணவக தலைமையில் கூடிய பாராளுமன்ற வழிவகைள் பற்றிய குழுவிலேயே கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்தனர்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு கூடியிருந்ததுடன், ‘அஸ்வெசும’ திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் தொடர்பில் செயற்படுவதற்குத் தாம் தயார் இல்லையென கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலகிய பின்னர் கிராம உத்தியோகத்தர்கள் மீது அழுத்தத்தைக் கொடுப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக இதுவரை ‘அஸ்வெசும’ தொடர்பில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகள் தாக்கல்செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் கிராம உத்தியோகத்தர்கள் தலையிட்டு இப்பணிகளை முன்னெடுப்பது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்ட அவர்கள், சமுர்த்திக் கொடுப்பனவைக் குறைத்துள்ளார்கள் எனப் பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாரில்லையென்றும் தெரிவித்தனர். இதில் தலையிட்டால் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தங்களை மக்கள் வெறுக்கத் தொடங்குவார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

இதற்கமைய கிராம உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பைத் தயாரிக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துவது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சுக்கு அறிவிப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here