ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக குறுகிய காலத்தில் பெருமளவான சட்டங்களைக் கொண்டுவந்ததாகவும், வலுவான ஊழல் ஒழிப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து அதனை உரிய வகையில் சட்டமாக்கியிருப்பதாகவும் ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருத்தமானவர்கள் மற்றும் பொருத்தமற்றவர்கள் என அனைத்து தரப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றும் இயலுமை ரணில் விக்ரமசிங்க என்னும் தலைமையிடம் உள்ளது. அவரின் அனுபவங்களை தேசிய நலனுக்காக பயன்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிட்ட வஜீர அபேவர்தன, நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் வேண்டுமெனில் அரச பொறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அதேபோல் பாராளுமன்றத்தில் காணப்படும் அரசியல் ஒற்றுமையின்மை நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும், அதனால் அரசியல்வாதிகளின் பலவீனமாக விளையாட்டுக்களை விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்துடன் இணைந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமான இரண்டு பிரதான நிறுவனங்களான நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மறுசீரமைப்பு முழு அரச பொறிமுறையிலும் (System Change) செய்யப்பட வேண்டும். மறுசீரமைப்பு செயல்முறை பாராளுமன்றத்தின் ஊடாக மக்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
அத்துடன், உலகில் ஊடகங்கள் தொடர்பான சட்டங்களை பார்க்கும்போது, உதாரணமாக, சிங்கப்பூரின் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையச் சட்டம் மிகவும் சக்திவாய்ந்த ஒன்று. இலங்கையில் இது வரையில் இவ்வளவு சக்திவாய்ந்த சட்டமூலம் முன்வைக்கப்படவில்லை என்பது குறித்து நாம் உண்மையில் வருத்தப்பட வேண்டும்.
சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணைக்குழு சட்டத்தில் மிக முக்கியமான பல உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஊடகத்தை வளர்ப்பதற்காக, அது உலக அங்கீகாரம் பெற்ற பிபிசி ஊடகமாக இருக்கலாம், Aljazeera ஊடகமாக இருக்கலாம், இல்லையெனில் CNN ஊடகமாக இருக்கலாம். இலங்கை ஊடகங்களை அவ்வாறான ஊடகமாக மாற்றுவதற்கு, இலங்கைக்கு ஊடகச் சட்டம் தேவை.
இவ்வாறான நிலையில், ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் போன்ற முக்கியமான சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, ஒழுக்கத்தை மதிக்க விரும்பாத குழுக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒட்டுமொத்த இலங்கை மக்களும் ஒழுக்கமான சமூகமாக வாழும் உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.” என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவரத்தன தெரிவித்தார்.