2025ஆம் ஆண்டாகும்போது இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விராஜ் டி சில்வா தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் 07 மாதங்களில் மாத்திரம் இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 312 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.
வருடாந்தம் 02 பில்லியன் டொலர் இலக்கை அடைவதற்கு பிரதான தடையாக இருந்த சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்று ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட “1O1” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை நாடு முழுவதும் ஆறு பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இந்த அலுவலகங்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுரங்கத்தில் இரத்தினக்கல் கிடைத்தாலும் அவர்களின் தனிப்பட்ட விருப்புக்கேற்ப அதனை விற்பனை செய்ய முடியாது என சபையின் தலைவர் விராஜ் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சட்டப்படி, அது பொது ஏலத்தில் விற்கப்பட வேண்டும் மேலும், இரத்தினக்கல்லை விற்ற பிறகு கிடைக்கும் பணத்தில் 2.5% அரசாங்கத்துக்குக் கிடைக்கிறது. அண்மையில் 40 கோடி மதிப்பிலான இரத்தினக்கல் ஒன்று விற்பனையானது. இந்நாட்களில் சுரங்க செயற்பாடுகளில் முன்னேற்றம் உள்ளது.
இரத்தினக் கற்களுக்கு கிடைக்கும் தொகையும் தற்போது அதிகரித்துள்ளது. சுரங்கங்களை நடத்துவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக சுரங்கங்கள் நடத்தப்பட்டால், அவற்றின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய வேண்டியேற்படும். இரத்தினக் கல்லொன்றை சாதாரணமாக ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும், இரத்தினக்கல் கிடைத்த பின், அதை பட்டை தீட்டி இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அங்கீகாரத்துடன் ஏலம் விட வேண்டும்.
இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரையில் இரத்தினக்கல் ஏற்றுமதியில் 312 டொலர் மில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது. இருப்பினும் அதனை விடவும் அதிகமான வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இயலுமை எம்மிடத்தில் உள்ளது.
இரத்தினக்கல் ஏற்றுமதியினால் வருடாந்தம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டிக்கொள்ளமுடியும். இலங்கையை இரத்தினக்கல் வியாபாரத்திற்கான திறந்த சந்தையாக மாற்றியமைக்க வேண்டும். அதுபோன்ற பாரிய வேலைத்திட்டங்களை தற்போதும் நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்று ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.