சாகல ரத்நாயக்க விடுத்துள்ள அறிவுறுத்தல்

250

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர் செல்லும் சுரங்கப்பாதைகளின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து பெறப்பட்ட தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில், அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்நிர்மாணப் பணிகள் மற்றும் இதற்காக எதிர்பார்க்கப்படும் செலவுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றை, இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்த அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் நீர் செல்லும் சுரங்கப்பாதைகளின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் குறித்த துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகளுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீர்ப்பாசனத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகார சபை மற்றும் மின்சார சபைக்கு சொந்தமான நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை எடுத்துச் செல்லும் அனைத்து நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் தொழில்நுட்பப் பாதுகாப்புக் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, நீரை எடுத்துச் செல்லும் சுரங்கப்பாதைகள் அடைப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றில் சேர்ந்துள்ள மணல் மற்றும் சேற்றை அகற்றி அவற்றை புனர்நிர்மாணம் செய்தல், அண்மைக் கால நிலநடுக்கங்களால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் ஆண்டுதோறும் சாதாரண சூழ்நிலையில் நிகழும் பாதிப்புகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நீர்ப்பாசனத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here