பல நாடுகளின் சிரேஷ்ட அமைச்சர்கள் – பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு

204

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது

2023 ஒக்டோபர் 11ஆந் திகதி கொழும்பில் இலங்கை நடாத்தவுள்ள 23ஆவது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்காக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

அமைச்சர்கள் குழு என்பது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் மிக உயர்ந்த அமைப்பாகும். தற்போதைய தலைவரான பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் தலைமைப் பதவியை வழங்கும்போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சபைக்கு தலைமை தாங்குவார்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 25ஆவது கூட்டம் (ஒக்டோபர் 9-10) நடைபெறும்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு, மீன்பிடி முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில், சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட ஆறு முன்னுரிமைப் பகுதிகளில் ஒத்துழைப்பதற்கான வழிகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்கவுள்ளனர்.

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி சல்மான் அல் ஃபரிசி மற்றும் மொரிஷியஸில் உள்ள இந்து சமுத்திர எல்லை சங்க செயலகத்தின் பணிப்பாளர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

எமது நாட்டுக்கு விஜயம் செய்யும் அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதுடன், இலங்கையில் தங்கியிருக்கும் போது, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய அமைச்சர்களுடனும் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here