புதிய அரச – தனியார் பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும்

464

இலங்கையின் பூகோள ரீதியான அமைவிடமும் மனித வளமும் மட்டுமே பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கான ஒரே வழி என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை கட்டியெழுப்புவதற்கு மனித வளத்தை அதிகபட்சமாக பயன்படுத்துவதே முக்கிய நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

சிங்கப்பூர், ஹொங்கொங் போன்ற நாடுகள் மனிதவளத்தை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLIIT) கண்டி கிளையை நேற்று (09) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பை நவீனமயமாக்கும் அதே வேளையில், தேவையான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கும் வகையில், புதிய அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடன் மீட்சிச் திட்டம் முடிவடைந்த பின்னர் அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் குறித்து அறிவிக்க எதிர்பார்க்கிறோம். முதலில், வேகமாக வளர்ந்து வரும், அதிக போட்டித்தன்மை கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, டிஜிட்டல் முறைமை அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும், மூன்றாவதாக, பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

இன்று இலங்கை பசுமைப் பொருளாதாரத் திட்டங்களுக்குள் பிரவேசித்துள்ளதுடன் அதற்கான பரந்தளவிலான பணிகளை முன்னெடுத்துள்ளது .

இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நமக்கு புதிய கல்வி முறையும் அறிவும் தேவை. அதற்கு, தற்போதுள்ள பல்கலைகளை நவீனமயமாக்கி, புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் இந்தப் பல்கலைக்கழகங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இலாபத்தை மீள முதலீடு செய்யும் முறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் பல்கலைக்கழகங்களை நிறுவ முடியும்.

இலங்கைப் பல்கலைக்கழகம் இந்தக் கண்டிப் பகுதியில்தான் நிறுவப்பட்டது. ஆனால் அதன் இன்றைய நிலை குறித்து மகிழ்ச்சியடைய முடியாது.

அப்போது ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக விளங்கிய இலங்கைப் பல்கலைக்கழகம், முதல் மூன்று நான்கு தசாப்தங்களில் நாட்டின் சுதந்திரத்தை முன்னேற்றுவதற்கு பரந்த பங்களிப்பைச் செய்தது. எனவே இந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

மேலும், கண்டியில் சென்னை IIT வளாகம் ஆரம்பிப்பது குறித்து இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளேன். பின்னர், அதனை தனியான பல்கலைக் கழகமாக மாற்றலாம். அத்துடன், கொத்மலை பிரதேசத்தில் காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொல்கொல்ல பிரதேசத்தில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வேலைத்திட்டங்களினால் கண்டி தொழில்நுட்ப மையமாக மாறும் என்றே கூற வேண்டும். மேலும், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு பதிலாக தொழிற்கல்லூரிகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம். பட்டதாரிகள் மட்டுமின்றி, அனைத்து துறைகளுக்கும் உள்ள பணியாளர்கள் தேவை. அந்த வளர்ச்சியுடன் நாம் முன்னேற வேண்டும்.

புவியியல் அமைவிடம் மற்றும் மனித வளம் என்பவற்றில் மட்டுமே நாம் பொருளாதார ரீதியாக தனித்துவம் பெற்றுள்ளோம். எங்களிடம் வேறு எதுவும் இல்லை. சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகள் மனித வளத்தினால் முன்னேறின. எம்மால் ஏன் மனித வளத்தில் முன்னேற முடியாது?

பசுமைப் பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பப் பொருளாதாரத்துடன் நாம் முன்னேற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கப்படுகிறது. இதையெல்லாம் அரசாங்கத்தினால் மட்டும் செய்ய முடியாது. இன்று இந்த நடவடிக்கைகளுக்கு பங்களித்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here