தனியார் துறையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

251

தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்த அழைப்பு விடுத்தார்.

தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவத் தொழில் கண்காட்சியை இன்று (11) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தை (National IT and BPM Week) ஆரம்பித்துவைக்கும் முகமாக இந்தக் கண்காட்சி , ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது.

இன்று வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்ற தருணத்தில் நாம் இருக்கிறோம். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவது மட்டும் போதுமானதல்ல. பெற்ற கடனை திரும்பச் செலுத்த வேண்டும். நமக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கும் பணம் செலுத்த வேண்டும். அதற்கான அந்நியச் செலாவணி எம்மிடம் இல்லை. எனவே, நாம் மீண்டும் கடன் பெற வேண்டியேற்படும்.

நாம் கடன் சக்கரத்தில் தொடர்ந்து இருக்கப்போகின்றோமா அல்லது அதிலிருந்து வெளியேறி முன்னேறிச் செல்கிறோமா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, இந்த நாட்டில் மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரத்துடன், நாம் உலகச் சந்தைக்கு நகர்ந்து, வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் வருமானத்தை அதிகரித்து மேலதிகக் கையிறுப்பை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செயற்பட்டுவதன் காரணமாக இந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

நாங்கள் புதிய பல்கலைக்கழக கட்டமைப்பொன்றை ஆரம்பிப்போம். அதன்போது, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொறிமுறைப்படி அரசாங்கம் 03 பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை தொடங்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் போன்று இலாபத்தை மீண்டும் பல்கலைக்கழகத்தில் முதலீடு செய்யும் குழுவுடன் அந்த நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் துறை என்பவற்றில் தங்கியுள்ளது. எனவே நாம் அதற்குள் செல்ல வேண்டும்.

இன்று, ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியா போன்ற கிழக்கு ஆசியாவின் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. எனவே அனைவரும் இணைந்து முன்னேறுவோம். புதிய பல்கலைக்கழகங்களில் நீங்கள் இணையலாம். மேலும், தொழில்முறை மையங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை நீங்கள் வழங்கலாம்.

இந்தத் தொழில்நுட்பத்துடன் புதிய தொழிற்சாலைகள் உருவாகும்போது, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன. இன்று பலர் வேலை இழந்துள்ளனர் அவ்வாறான இளைஞர்களுக்கு இந்த அறிவை வழங்க முடியும். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். அதற்கான உங்கள் பதிலைக் கூறுங்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here