புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இலங்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் மலையக மக்களும் பெரும்பாலும் இடம்பெறுகின்றனர். வீட்டு பணிப்பெண்ணாக செல்பவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே, அவர்களின் பாதுகாப்புக்காக விசேட அலகொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார்.
அத்துடன், இலங்கையில் உள்ள தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கான நிதி உதவி உள்ளிட்ட வசதிகளை மென்மேலும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.