கட்சி ஜனநாயக அரசியலுக்குள் காணப்படும் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு, புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதான மண்டபத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (27) நடைபெற்ற “ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா” நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாம் என்றும் பயந்தோடவில்லை. நானும் பிரதமரும் இன்றும் இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறோம். நாம் இருவரும் சகபாடிகள், எங்கள் இருவருக்கும் சொந்த வீடுகள் இல்லை. நான் தற்காலிக வீட்டிலேயே இருக்கிறேன். நாம் கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு மாறாக எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறோம்.
உலகம் மாற்றம் கண்டுவரும் வேளையில், இந்நாட்டின் பொருளாதாரத்தை நாம் எவ்வாறு மாற்றியமைப்பது என்று சிந்திக்கிறோம். கல்வி முறையிலும் மாற்றம் வேண்டும். கல்வி அமைச்சரிடத்தில் அது குறித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளேன். ரெடிகல் முறையில் மாற அவசியமான திட்டத்தை தயாரித்துள்ளோம்.
இன்று மலையகத்தின் பாடசாலையொன்றில் 80 மாணவர்கள் மாத்திரமே உள்ளனர். இருப்பினும் இந்த பாடசாலையில் 8000 மாணவர்கள் உள்ளனர். 20 -30 பாடசாலைகள் மாத்திரமே 5000 மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளன. அதனால் பாடசாலை முகாமைத்துவம் தொடர்பிலான புதிய முறைமை தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இன்று நாட்டிலுள்ள 50 – 100 பாடசாலைகளுக்குள் போட்டி நிலவுகிறது. அந்த 100 பாடசாலைகளிலும் லண்டன் பாடசாலைகளுக்கு நிகரான தெரிவைக் கொண்ட மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். எமது உயர்தர பரீட்சை இலண்டன் உயர்தர பரீட்சை விடவும் கடினானதாக அமைந்திருப்பதே அதற்கான காரணமாகும்.
நாம் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய அறிவியல் முறைமைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அனைத்து துறைகளினதும் முன்னேற்றத்திற்கு எமக்கு புதிய முறைமைகள் அவசியப்படுகின்றன.
அதேபோல் புதிய பொருளாதாரம், அரசியல் முறைமைகளுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு புதிய நாட்டை கட்டியெழுப்புவோம். பாராளுமன்றத்திலும் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவோம். கட்சி ஜனநாயக அரசியல் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு அனைவரும் ஒன்றுபடுவோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.