அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நன்மைகள் தாமதமான குடும்பங்களுக்கும், உடனடியாக நன்மைகளை வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து அஸ்வெசும வாரத்திற்குள் நிவாரணப் பயனாளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,
நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். அஸ்வெசும கொடுப்பனவுகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவுகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால் பணம் கொடுப்பதில் தொழில்நுட்ப சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றைத் தீர்த்து, பணம் செலுத்துவதை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம். வங்கிக் கணக்குகள் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தன. இந்த வாரத்திற்குள் அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுத்துள்ள தீர்மானங்கள் பிரபல்யமானதாக இல்லாவிட்டாலும், இதுவரை எட்டப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அது பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஏனைய மக்களும் இதன் பலனைப் பெறுகின்றனர். அரசாங்கம் என்ற வகையில், நாட்டை வலுவான பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்லும் சூழலை உருவாக்கி வருகிறோம்.” என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.