சர்வதேச சமூகத்துடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதே இலங்கையின் நோக்கம்

98

இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் பொற்காலமென கருதப்படும் மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் ஆட்சிக்காலம் முதல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலம் வரையிலானது எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி,உலகளாவிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சர்வதேச அரங்கில் இலங்கையின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்ற பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடன் நெருக்கடி, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தாமதம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட கொவிட் தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி மற்றும் உலகளாவிய புவிசார் அரசியலில் அதன் தாக்கத்திலிருந்து எழும் சிக்கலான தன்மையையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமையை “உலகளாவிய பலதரப்பு நெருக்கடியின் புவிசார் அரசியல்” என்று அழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொவிட் 19 தொற்றுநோய், கடன் நெருக்கடி, காலநிலை மாற்றம், வர்த்தக பிரச்சினைகள் மற்றும் பிராந்திய மோதல்கள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சவால்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் அணுகுமுறை இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பான ஆசியான் அமைப்பின் நோக்குடன் சமநிலைப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த சமுத்திரங்கள் ஒவ்வொன்றும் இரண்டு பெரும் சமுத்திரங்களாக தனித்தனி அடையாளங்களைக் கொண்டிருப்பதாகவும் வலியுறுத்தினார்.

ஆசிய-பசுபிக் கருத்தாக்கத்தை சீனா விரும்புவதாகவும், ஒரு பெல்ட் ஒரு சாலைக் எண்ணக்கருவின் மூலம், பசுபிக் சமுத்திரத்தையும் இந்து சமுத்திரத்தையும் இணைத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த அனைத்து சூழ்நிலைகளிலும் கூட, பெரும் அதிகாரப் போட்டி இல்லாத இடமாக இந்து சமுத்திரத்தைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

ஆபிரிக்க பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்காக இலங்கை முன் நிற்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தை குறைப்பதற்காக வெப்பமண்டல பிராந்தியத்திலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

காஸாவில் நடைபெற்று வரும் போர் குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி, ஹமாஸ் அமைப்பின் தலைமைத்துவத்தை அழிப்பதன் மூலம் மாத்திரம் மோதலை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்றும், மேலும் அது தீவிரமடைவதைத் தடுக்க உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள எபெக் (APEC) உச்சிமாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் ஆகியோருக்கு இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பின் ஊடாக தற்போதைய நிலைமையைத் தணிக்க சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த உலகளாவிய சிக்கல்களைக் கடந்து செல்வதற்கு கூட்டு முயற்சி அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here