வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்படும்

325

மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மாத்திரமன்றி, அந்த நிவாரணங்களை எவ்வாறு வழங்குவது என்பதை எடுத்துக் காட்டிய இம்முறை வரவு செலவுத் திட்டம், நிச்சயம் அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த,

2024 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதுடன் சிறுநீரக நோயாளர்கள் மற்றும் அங்கவீனருக்கான கொடுப்பனவுகளையும் அதிகரிக்க முன்மொழியப் பட்டுள்ளது. மேலும் மலையக மக்களுக்கு முழு காணி உரிமை வழங்குதல், பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயிகளுக்கு வழங்குதல், உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற நீண்ட கால வேலைத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, நவீன உலகிற்குப் பொருத்தமான தொழில் வல்லுநர்களை உருவாக்கும் திட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளால் மாத்திரம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

அதற்கு நீண்ட கால வேலைத்திட்டங்கள் தேவை. இந்த நீண்ட கால வேலைத்திட்டங்களில் 2034 ஆம் ஆண்டுக்குள் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதும் அடங்குகின்றது. மேலும், இதில் நேரடி வரிகளை அதிகரிக்கும் திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்வார்கள் என எதிர்கட்சியினர் எதிர்பார்த்தாலும் நிவாரணங்களை வழங்குதல் என்பதை விட, எவ்வாறு அந்த நிவாரணங்களை வழங்குவது என்ற விடயமே இந்த வரவுசெலவுத் திட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வருட வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை. தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து நாட்டை வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்லுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக அமையும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்குப் போதிய பணம் இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் விரைவான பொருளாதார வளர்ச்சியுடன், தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். ஜனாதிபதியின் அரசியல் தலைமையின் கீழ் தேர்தல் ஆணைக்குழு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தும்.

மேலும், டொலரின் பெறுமதி அதிகரிப்புடன், நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்த போதிலும், தற்போது அந்நிலைமை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் நியாயமற்ற முறையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பது குறித்தும், டொலரின் பெறுமதி குறைவடைந்ததன் பலன் மக்களுக்கு கிடைக்கின்றதா என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here