உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பன அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டும் மூன்று பிரதான நிறுவனங்களாகும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் டபிள்யூ. எம். ஜி. குமாரதுங்க தெரிவித்தார்.
இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இலங்கையில் அரசாங்க வருமானத்தை சேகரிக்கும் மூன்று பிரதான நிறுவனங்களும் அரச வருமானம் 310,100 கோடி (3,101 பில்லியன்) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு இலக்கை அடைய முடிந்தால், 3,000 பில்லியன் ரூபாவைத் (3 டிரில்லியன் ரூபாய்) தாண்டிய முதல் சந்தர்ப்பமாக வரலாற்றில் இடம்பிடிக்கும்.
கடந்த 17 ஆம் திகதி ஆகும்போது, இந்த வருடத்தின் இதுவரை கால அரசாங்கத்தின் வருமானம் 239,400 கோடி ரூபாவை (2,394 பில்லியன் ரூபா) எட்டியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் 141,500 கோடி ரூபாவும் (1,415 பில்லியன்) இலங்கை சுங்கத்தால் 83,200 கோடி ரூபாவும் (832 பில்லியன்) ஈட்டப்பட்டுள்ளன. மதுவரித் திணைக்களம் ஈட்டிய வருமானம் 14,700 கோடி ரூபா (147 பில்லியன்).
எவ்வாறாயினும், இந்த வருட இறுதிக்குள் இந்த மூன்று அரச நிறுவனங்களினூடாக 3,101 பில்லியன் ரூபா வருமானம் மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் மேலும் 36,900 கோடி ரூபா (369 பில்லியன்) வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் 15,400 கோடி ரூபா (154 பில்லியன்) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்தும், 13,600 கோடி ரூபா (136 பில்லியன்) இலங்கை சுங்கத்திலிருந்தும் கிடைக்கும். மீதமுள்ள ரூ.3,300 கோடி (33 பில்லியன்) மதுவரித் துறையிடம் இருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள், மொத்த அரச வருமானம் 2,71,900 கோடி ரூபா (2,719 பில்லியன்) எதிர்பார்க்கலாம், ஆனால் 2023 என்ற மதிப்பிடப்பட்ட இலக்கை நோக்கி நகர முடிந்தால், இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச அரச வருமானமாக இருக்கும்.
அத்துடன் அரச வருமானத்தை மேலும் அதிகரிக்க ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி இலங்கை சுங்கத்தின் நாளாந்த வருமானம் 500 கோடி ரூபாவை எட்டியுள்ளது. 300,000 கோடி (3 டிரில்லியன்) வருமான இலக்கை எட்ட முடிந்தால், அது முதன்மைக் கணக்கு மேலதிகத்தை உருவாக்கும் அளவிற்கு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.” டபிள்யூ. எம். ஜி. குமாரதுங்க என்று தெரிவித்தார்.