ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம்

651

நாட்டை வங்குரோத்தாக்கிய நபர்களின் பிரஜா உரிமைகளை இரத்துச் செய்யுமாறும், இவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்றும், நாட்டின் வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் பேருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் இன்று (23) கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பொது மக்கள் கையெழுத்து திரட்டும் பணியை ஆரம்பித்தது.

இதன் பிரகாரம் நீதிக்கான மக்கள் ஆணையைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நாட்டின் சீரற்ற பலவீனமான மற்றும் ஊழல் நிறைந்த பொருளாதார நிர்வாகத்தில், நாடு வங்குரோத்தாகியமை, இந்த வங்குரோத்தின் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டமை என்ற அடிப்படையில் உயர் நீதிமன்றம் 4 இல் 1 என்றவாறு தீர்ப்பை வழங்கி மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச,பசில் ராஜபக்ச,பி.பி. ஜயசுந்தர,அஜித் நிவார்ட் கப்ரால்,எஸ்.ஆர். ஆடிகல,டபிள்யூ.டி.லக்‌ஷ்மன் மற்றும் நிதிச் சபையில் இருவரைத் தவிர ஏனையவர்கள் அடிப்படை உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த கையொப்பத் திரட்டின் மூலம் ஒரு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டு அதன் மூலம் நாட்டின் உயர் சட்டத்தின் பிரகாரம், நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய அனைவரினதும் பிரஜா உரிமைகளை இல்லாதொழிக்க ஜனாதிபதியை நிர்ப்பந்திக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு,அவர்களுக்கு மீண்டும் தேர்தல்களுக்கு முன்நிற்க முடியாதவாறும், வாக்குரிமையும் பிரயோகிக்க முடியாதவாறும் உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கிராமம் நகரமாக சென்று இலட்சக்கணக்கான கையெழுத்துக்களை திரட்டி, ஜனாதிபதி தொடர்ந்தும் ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாவலரும் அடிமையுமல்லாது மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டியதை கட்டாயமாக்கும் செயற்பாடு இதனூடாக மேற்கொள்ளப்படுவதாகவும், 220 இலட்சம் மக்களும் வீதிக்கு இறங்கி இந்த மனுவில் கையொப்பமிட்டு, ‘ராஜபக்சர்களைப் பாதுகாக்காமல் அவர்களின் குடியுரிமைகளை சட்டப்பூர்வமாக இரத்து செய்’ என்று ஜனாதிபதியை கட்டாயப்படுத்த முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

நாட்டின் வங்குரோத்து நிலமையினால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் பேருக்கு இழப்பீடு வழங்குவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும், நாட்டிலிருந்து திருடப்பட்ட நிதியை நாட்டுக்கு கொண்டு வந்து குறித்த நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் டீல் இன்றி திருடர்களைப் பிடிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here