சூழல் மற்றும் அபிவிருத்தியை எவ்வாறு சமநிலைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்

107

இதுவரை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டில் (COP) எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்கும் பிரதான நோக்கத்துடன் இந்த வருடம் டுபாயில் நடைபெறும் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இயற்கை வளங்களைப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும்போதும் சூழல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முறையான மற்றும் திட்டமிடப்பட்ட அறிவியல்பூர்வ அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இடம்பெறும் ஒரு சிறிய தவறு கூட பெரும் பேரழிவிற்கு வழிவகுக்கலாம் என்பதையும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,

சூழல் மற்றும் அபிவிருத்தியை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட நமது சுற்றுச்சூழல் கட்டமைப்பில் பாரிய அளவிலான வளங்கள் காணப்படுகின்றன. இரத்தினக்கற்கள் மற்றும் கனிய வளங்களைப் பொருளாதார ரீதியாக பயன்படுத்தப்படும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் முறையான ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அது தொடர்பான நமது சுற்றுச்சூழல் வேலைத்திட்டங்கள் முறையான மற்றும் திட்டமிட்ட அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறின்றி நடைபெறும் ஒரு சிறிய குறைபாடு எல்லாவற்றையும் அழிக்க முடியும். இது இருபத்தி இரண்டு மில்லியன் மக்களை மட்டுமல்ல, பிறக்கவிருக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இயற்கை சூழல் கட்டமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் தற்போது உலகளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பல உலகத் தலைவர்கள் இதில் ஆர்வமாக உள்ளனர். டுபாய் எக்ஸ்போ சிட்டியில் 2023 டிசம்பர் 04 ஆம் திகதி, நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை (Cop-28) மற்றொரு சிறப்பு நிகழ்வாக குறிப்பிடலாம்.

இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினரும் கலந்து கொள்கின்றனர். மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான பல முக்கியமான முன்மொழிவுகள் குறித்து உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here