அரிசி இறக்குமதி செய்யவில்லை என்றால் அரிசியின் விலை வேகமாக அதிகரித்திருக்கும்

393

இளைஞர் சமூகத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

எமக்கு வருடாந்தம் 25,40,000 மெட்ரிக் தொன் அரிசி அவசியமாகும். இம்முறை 27,50,000 மெட்ரிக் தொன் விளைச்சல் கிடைத்தது. இதன் ஊடாக இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கு மேல் மேலதிக விளைச்சல் இம்முறை கிடைத்துள்ளது. ஆனாலும் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. காரணம், அதிக நெல் விளைச்சல் கிடைத்தாலும் நெல் ஆலையாளர்கள் அவற்றை முழுமையாக சந்தைக்கு விநியோகிக்காத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

அதேபோன்று கீரி சம்பா விளைச்சலில் குறைவு ஏற்பட்டதே தவிர பொதுவாக மக்கள் உட்கொள்ளும் அரிசி வகையில் குறைவு ஏற்படவில்லை. எனவே இந்த பண்டிகைக் காலத்தில் அரிசி இறக்குமதி செய்யவில்லை என்றால் அரிசியின் விலை வேகமாக அதிகரித்திருக்கும். இதனால் தான் நாம் விருப்பமின்றியேனும் அரிசி இறக்குமதி செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அது தொடர்பில் நாம் விசேட வேலைத்திட்டமொன்றை தயாரித்துள்ளோம். அடுத்த வருடம் முதல் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. அதேபோன்று கோழி இறைச்சி இறக்குமதி செய்ய அனுமதி கோரப்பட்டாலும் கூட நாம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

தற்போது கோழி இறைச்சியின் விலை குறைவடைந்துள்ளது. பறவைக்காய்ச்சல் அற்ற நாடு என்ற வகையில் எமக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யக் கூடிய அதிக சந்தர்ப்பம் உள்ளது. ஏற்கனவே நாம் மாலைத்தீவுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். அடுத்த வருடம் முதல் இதனை இன்னும் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டு வருகின்றோம் என்று கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here