02 வருடங்களில் இரத்தினக்கல் துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம்

669

எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையில் இரத்தினக்கல் துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் அதற்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் தேசிய பொருளாதாரத்திற்கும், தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் கீழ் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறை விரிவான நவீனமயமாக்கலுக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு வரிச்சலுகைகளை வழங்கினால் மட்டும் போதாது, இந்த நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பாரிய துறையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த “Gem Sri Lanka 2024” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் இன்று (11) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு நாட்டில் புதிய பொருளாதார முறைமை உருவாக்கப்பட வேண்டும்.அது ஏற்றுமதி சார்ந்த பொருளாதார அமைப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கடந்த வரவு செலவுத் திட்ட உரையிலும் இரத்தினக்கல் தொழிலுக்கான கொள்கை கட்டமைப்பை தயாரிப்பது பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். அடுத்த இரண்டு மாதங்களில், அந்த கொள்கை கட்டமைப்பை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும். அதற்கேற்ப இந்த நாட்டின் இரத்தினக்கல் தொழில்துறை பெரும் அபிவிருத்தியை நோக்கி முன்னேறும்.

இலங்கையில் உள்ள இரத்தினக்கல் தொடர்பில் அதிக வாய்ப்புகள் உள்ளன. இயன் ஃப்ளெமிங் ஒருமுறை “வைரங்கள் நிரந்தரமானவை ” என்று கூறியிருந்தார். வைரங்கள் மட்டுமல்ல, இலங்கையின் இரத்தினங்களும் நிரந்தரமானவை. இலங்கை நீலக்கல்லுக்கும் நீண்ட வரலாறு உள்ளது.

மேலும், இரத்தினங்கள் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இரத்தினக்கல் தொழிலை நவீனப்படுத்த வேண்டும். மேலும் இந்தத் தொழிலில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

நாம் வரிச்சலுகை கேட்டுப் பழகிவிட்டோம். ஆனால், அந்தச் சலுகைகளை எல்லாம் கொடுத்துவிட்டு, இந்தத் துறையில் இருந்து ஒரு பில்லியன் கூட சம்பாதிக்க முடியாது. அதாவது சலுகை வழங்குவது தோல்வியடைந்துள்ளது. அப்படியானால், சலுகைகள் கொடுக்கும் அதேவேளை இத்தொழிலை மேம்படுத்துவதுதான் செய்ய வேண்டும். இத்துறையில் உள்ள அனைவரும் பொருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டும். அத்துடன் இரத்தினக்கல் பட்டைதீட்டும் தொழிலில் ஈடுபடுபவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்.

பணத்தை தங்கள் பாக்கெட்டுகளில் போடுவதற்காக வரி விலக்கு அளிக்கும் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் தொழிலை பாரியளவில் முன்னேற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. எங்களிடம் எரிபொருள் இருக்கவில்லை. உரம் இருக்கவில்லை. உணவு கிடைப்பது சிரமமாக இருந்தது. 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது அனைத்தையும் நாம் மக்களிடம் மீளக் கொடுத்துள்ளோம். இப்போது அந்நியச் செலாவணி இருப்பதால், அதைச் செய்ய முடிகிறது.

இந்த அன்னியச் செலாவணி நமது ஏற்றுமதி மூலம் பெறப்படுவதில்லை. உலக வங்கி போன்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து அவற்றைப் பெற்றோம். 2022ல் எங்களுக்கு தேவையான உரத்தை அமெரிக்க அரசுதான் எமக்கு வழங்கியது. ஆனால் எப்போதும் எமக்கு இதில் தங்கியிருக்க முடியாது. ஏனைய நாடுகளிடம் எப்போதும் உதவி கேட்க முடியாது. நமக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அதற்கு நாட்டின் பொருளாதாரம் தயார் படுத்தப்பட வேண்டும்.

வாக்குறுதிகளை அளித்து இவற்றைச் செய்ய முடியாது. அந்நியச் செலாவணியை ஈட்டும் புதிய பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அது ஏற்றுமதி பொருளாதாரமாக இருக்க வேண்டும். இந்த சிறிய பிரதேசத்தில் இருந்து அதிக வருமானம் ஈட்டும் திறன் எமக்கு உள்ளது, ஒருபுறம் இரத்தினக்கல் தொழில் மூலம் வருமானம் கிடைக்கிறது.

இன்று, நாட்டின் அனைத்து குடிமக்களும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். நாம் அனைவரும் நாட்டின் உண்மையான நிலைமையை புரிந்து கொண்டு முன்னேறினால் 02 வருடங்களின் பின்னர் இந்நிலையிலிருந்து விடுபட முடியும் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு கட்டியெழுப்பப்படும் இந்நாட்டின் எதிர்காலத்தினால் நன்மை கிடைக்கப் போவது எனக்கல்ல. அந்த நன்மை இந்நாட்டு இளைஞர் சமூகத்திற்கே செல்கிறது. அந்த இளம் சமூகத்தின் எதிர்காலத்திற்காக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here