IMF உடன் கலந்துரையாடலுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதி அழைப்பு

392

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை விலகிக் கொண்டால் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மீண்டும் நம்பிக்கை வைக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான உடன்படிக்கையுடன் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், தேர்தலுக்குத் தயாராகும் பட்சத்தில் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் திட்டமொன்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு சுங்கத் தலைமையகத்தில் இன்று (26) முற்பகல் இடம்பெற்ற சர்வதேச சுங்க தின நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டில் பெறப்பட்ட வரி வருமானத்திற்காக சுங்கத் திணைக்களத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டங்கள் மற்றும் நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் என்பன அரச வருமானத்தை ஈட்டும் அனைத்து நிறுவனங்களையும் மாற்றியமைக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்திற்கு கூடுதல் பணியாளர்களை வழங்க முடியாவிட்டாலும், செயல்திறன் ஊடாக எந்தளவு வருமானத்தை அதிகரித்துள்ளமை சிறப்புக்குரியது. நாம் இன்னும் வெகுதூரம் முன்னோக்கிச் செல்ல வேண்டும், விரைவில் நாம் கொண்டு வரவிருக்கும் புதிய சட்டத்தின் ஊடாக சுங்கம் மற்றும் ஏனைய வருமானத் திணைக்களங்களை முழுமையாக நவீனமயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது என்பதைக் கூற வேண்டும். 2023இல் நாம் எடுத்த முடிவுகளால், 2022இல் பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்கான வழி ஏற்பட்டது. ஆனால் அது இன்னும் முடியவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% ஆக்குவோம். 2026இல் அதனை 15% ஆக அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

எனவே தற்போதைய பொருளாதாரத்தில் இருந்து வருமானம் ஈட்ட வேண்டும். வருமானத்தை அதிகரிக்க, பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அடைவது என்ற கேள்வியை இன்று நாம் எதிர்கொண்டுள்ளோம். பழைய பொருளாதார முறையால் நாட்டை முன்னேற்ற முடியாது. ஒவ்வொரு நாளும் கடன் வாங்குவதால் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. இந்த பொருளாதார முறையை மாற்ற வேண்டும்.

போட்டிச் சந்தையுடன், ஏற்றுமதியை அதிகரிக்கவும், அன்னியச் செலாவணியை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெப்ரவரி 03 ஆம் திகதி தாய்லாந்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளோம். நம் நாட்டைப் போலவே தாய்லாந்தும் தேரவாத பௌத்த நாடு. ஆனால் அவர்கள் தனி வழியில் சென்றனர். நாங்கள் வேறு வழியில் சென்றோம். அதன் வேறுபட்ட பலன்களை இன்று காண்கிறோம்.

நாம் எடுக்கும் தீர்மானங்களினால் இந்த நாட்டின் எதிர்காலப் பொருளாதாரம் எவ்வாறு அமையும் என்பதைச் சிந்திக்க வேண்டும். நாம் கலந்துரையாட வேண்டும். அவை பற்றி அரசியல் கட்சிகள் கலந்தாலோசிக்க வேண்டும். அவர்கள் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றால், இந்த நாட்டின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நிலவிலிருந்து அரிசி கொண்டுவருவதாக கட்டுக் கதைகளை கூறி அதனை செய்ய முடியாது. தற்போது எம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இணங்க முடியுமா? அல்லது அவற்றை மாற்றியமைக்க வேண்டுமா? என்பது தொடர்பில் ஆலோசிக்க வேண்டும்.

இன்றும் எமது அரசியல், அப்பளத்தை போலவே உள்ளது. பொரித்தவுடன் அதனை எடுத்து சாப்பிடுகிறோம். மறுதினம் மற்றொன்றை போடுகிறோம் பின்னர் அதனை மறந்துவிடுவோம்.

சமூக ஊடகங்கள் தொடர்பிலான சட்டம் கொண்டுவரப்பட்ட போது நாட்டில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது எனக் கூச்சலிட்டனர். இருப்பினும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அதனை அனைவரும் மறந்துவிட்டனர். அதேபோல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சமர்பிக்கப்படவுள்ளது. இதன்போதும் மக்களின் உரிமை மீறப்படுகிறது, அனைவரையும் சிறையில் அடைக்க போகிறார்கள் எனக் கூச்சலிடுவர். பின்னர் அதை மறந்துவிடுவார்கள்.

அதன் பின்னர் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் சமர்பிக்கப்படும் போது கல்வி ஒழிக்கப்படுவதாக கூச்சலிடுவர். பின்னர் மறந்துவிடுவார்கள். அப்பளத்தை போல் மேலே வந்த பின்னர் சத்தம் குறைந்துவிடும். இந்த அரசியலுக்கு என்னால் முடிவுகட்ட முடியாது. இருப்பினும் அவ்வறான அரசியலே எமது நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்பதை கூற முடியும்.

எமது நிலையிலிருந்து எழுந்து முன்னேறிச் செல்வதற்கான இயலுமை எமக்கு இருக்க வேண்டும். அதனால் உங்களுடைய எதிர்காலம் மாத்திரமின்றி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் சிறக்கும். அதனால் சர்தேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் அவசியமா? இல்லையா? மாற்றங்கள் அவசியமா என்பதை பாராளுமன்றத்தில் ஆலோசிக்க வருமாறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here