உமாஓயா – 120 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டம்

171

உமாஓயா திட்டத்தின் கீழ் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், 31 நீர்த் தேக்கங்கள் மூலம் நீரில் மிதக்கும் சோலார் பேனல்களைப் பயன்படுத்தி 3,077 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க முடியும் எனவும் இதற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிப்பதையே, 2024 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன அமைச்சின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வருட வரவு செலவு திட்டத்தில் நீர்ப்பாசன அமைச்சுக்கு 23,413 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார். இதில் நீர்த்தேக்க பராமரிப்புக்காக 6,913 மில்லியன் ரூபாவும் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு 16,500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக பல பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்களின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

மேலும், தேசிய மின் கட்டமைப்பில் சூரிய சக்தி மற்றும் நீர் மின்உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதன் கீழ், நிலம், கூரைகள் மற்றும் நீரில் மிதக்கும் சூரிய மின்கலங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

நீரில் மிதக்கும் சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்காக 31 நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வகையில், இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான 14 நீர்த்தேக்கங்களிலிருந்து 2,524 மெகாவோட் மின்சாரத்தையும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 17 நீர்த்தேக்கங்களிலிருந்து 553 மெகாவோட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மின்சார அமைச்சுடன் இணைந்து செயல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வடமத்திய பெரிய கால்வாய் நிர்மாணிப்பதன் மூலம் 07 பிரதான குளங்களுக்கும் 350 சிறிய குளங்களுக்கும் இரு போகங்களுக்குத் தேவையான நீரை வழங்க முடியும். மேலும் ஒரு இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேருக்கு குடிநீர் வழங்கவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்போடு விவசாய அமைப்புகளின் மூலம் கிராமப்புற விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உலக வங்கியின் உதவியின் கீழ் 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here