இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியிருப்பது தேசத்துரோகச் செயலாகும். இது மரண தண்டனைக்கு உரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின் இறைமை மற்றும் சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டத்தில் தேசத்துரோகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை மரண தண்டனை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு கூர்ந்தார்.
“தேசத்துரோகம் என்பது ஒரு அரசனுக்குத் துரோகம் செய்வதல்ல. நமது தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோகத்திற்கான தண்டனை மரணம். எளிமையாகச் சொன்னால், அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைச் செய்துள்ளார்.
இந்த அறிக்கையானது அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தை மீறும் செயலாகும். இதன்படி அமைச்சர் ஹரீன் அமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் கூட்டத்தில், அமைச்சரவை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, “இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி” என அவரது உரையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.