கொழும்பு – டில்லி உறவை மேலும் வலுப்படுத்த முன்னின்று செயற்படுவேன்

241

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் இலங்கை மக்களின் நலன்கருதி இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளையும், மலையக மக்களுக்காக இந்தியா வழங்கி வரும் ஆதரவையும் ஒருபோதும் மறக்கமாட்டோம், கொழும்பு – டில்லி உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு முன்னின்று செயற்படுவேன் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் இராமாயணம் சித்திரகாவியம் எனும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில், இராமாயண காவியத்தின் புகழை உலகறிய செய்யும் நோக்கில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணக்கருவுக்கமைய, இந்திய கலாசார அமைச்சின் ஏற்பாட்டிலேயே இந்நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நடைபெற்ற இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வில் இந்திய ஒன்றிய அரசின் இணை அமைச்சர் மீனாட்சி லேகி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் அழைப்பையேற்று சிறப்பு அதிதியாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்து சிறப்பித்தார்.

“இலங்கை, இந்திய உறவு பல நூற்றாண்டுகளாக பலமாகவே உள்ளது. நெருக்கடி ஏற்பட்டபோது கூட இந்தியா தான் முதலாவதாக நேசக்கரம் நீட்டியது. இதனை நாம் மறக்கமட்டோம்.

இராமாயணத்துடன் தொடர்புபட்ட முக்கியமான புனித தலங்கள் நான் பிரதிநிதித்துவப்படுத்தும், மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளன. இதன்மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் திட்டம் வகுத்து வருகின்றோம்.

இராமாயணம் சித்திரகாவியம் நிகழ்வு இந்தியாவுக்கு மட்டும் அல்ல இலங்கைக்கும் மிக முக்கியம்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கு நான் முன்னின்று செயற்படுவேன்.” என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here