சொத்துக்கள், பொறுப்புகள் வெளியிடும் சட்டத்தில் திருத்தம்

169

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் பிரிவுகளுக்கு மேலதிகமாக, 2023 ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 80 இன் ஊடாக மேலும் அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் பல பிரிவுகள் ஊடாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை அறிவிப்பதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண பகிரங்க சேவையின் பணியாட்தொகுதி அலுவலர்கள், உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பணியாட்தொகுதி அலுவலர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நீதிபதிகள் மற்றும் அரச அதிகாரிகள்,அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட அரச அலுவலர்கள், அமைச்சுகள் மற்றும் அரசாங்க திணைக்களங்களின் அதிகாரிகள், அரசியலமைப்பின் 41அ(1)(உ) எனும் உறுப்புரையின் நியதிகளின் படி நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள், அரசியலமைப்பின் 41ஆ உறுப்புரைக்கான அட்டவணையில் குறிப்பிடப்பட்ட எவையேனும் ஆணைக்குழுக்களின், விடயத்திற்கேற்ப, தலைவர்கள் அல்லது உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட நபர்கள் ஆகியோரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி மற்றும் அரச வங்கிகளின் பணியாட்தொகுதி அலுவலர்கள், அரசியலமைப்பின் 41அ (1)(இ) உறுப்புரையின் கீழ் அல்லது எதேனும் நியதிச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் பணியாட்தொகுதி அலுவலர்கள், ஏதேனும் நியதிச்சட்டத்தினால் அல்லது அதன் கீழ் தாபிக்கப்பட்ட சுயாதீன ஒழுங்குபடுத்துகை மற்றும் மேற்பார்வை ஆணைக்குழுக்களின் அல்லது குழுக்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பணியாட்தொகுதி அலுவலர்கள், ஏதேனும் நியதிச் சட்டத்தினால் அல்லது அதன் கீழ் நிறுவப்பட்ட அரச சபைகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏதேனும் பகிரங்கக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அலுவலர்களும் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்காக மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பொன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டமைப்பை, முறைப்படி தொடங்கும் வரை புதிய சட்டத்தின் விதிகளின்படி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை அறிவிக்கும் மாதிரியில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அகியவற்றை வெளியிடுவது தொடர்பான முறைமை உள்ளடங்கிய சுற்றுநிருபம் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை வெளியிடுவது தொடர்பான திருத்தப்பட்ட மாதிரிகள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் www.ciaboc.gov.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 01-03-2024 முதல் பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேற்படி சுற்றறிக்கையின் பிரகாரம், மறு அறிவித்தல் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here