சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, நாளை(11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச, அநுர குமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் பங்கேற்க விரும்பும் எவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அண்மையில் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரின் கூட்டுப் பொறுப்புக்கூறல் அவசியமானது என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.
நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ்.சமரதுங்க ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.