பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடுகிறது

109

பாராளுமன்றத்தை இன்றும்(1) நாளையும்(2) கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவர்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கு அமைய இன்று(01), மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை 2024.03.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப 4.30 மணிக்கு தனிநபர் சட்டமூலமான சர்வதேச தேரவாத நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டின் பின்னர் சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.

இதன் பின்னர் பி.ப 4.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

2024 ஏப்ரல் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.00 மணிவரை வங்கித்தொழில் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான 2358/70 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, சேர் பெறுமதி வாிச்சட்டத்தின் 2363/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான 2370/15 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப 4.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here