நாட்டிற்கு உகந்த போட்டித்தன்மையுள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற முதலீட்டுச் சபையின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மிகவும் மோசமான காலகட்டத்தை கடந்து வந்துள்ளோம். நீங்கள் அனைவரும் அதற்கு முகங்கொடுத்தீர்கள். பொருளாதார ரீதியில் அவர்கள் அனைவரினதும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப இந்த நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும், இரண்டு வருடங்களுக்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எம்மால் முடிந்தது. அந்த நிலைமையை நாங்கள் தற்போது பேணி வருகிறோம். பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு நாம் இனி மத்திய வங்கியைச் சார்ந்திருக்க மாட்டோம். அதற்காக நாம் சந்தையை நாடுவோம்.
அடுத்து, நமது பொருளாதாரத்தை அதிக போட்டி நிறைந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இதைச் செய்ய உங்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் செல்லும். இதற்கிடையில், முதலீட்டு சபையையின் தன்மையை பொருளாதார ஆணைக்குழுவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன் மூலம் முழு இலங்கையையும் உள்ளடக்கிய முதலீட்டு வலயத்தை உருவாக்குவோம்.அதன் பிரகாரம் முதலீட்டாளரான நீங்கள் அனுமதிப்பத்திரம் பெற்ற உரிமையாளராக மாறுவீர்கள். இதன் ஊடாக உங்களுக்கென வலயமொன்றை பேண முடியும்.
நாங்கள் இப்போது அதிக போட்டித்தன்மையான முதலீடுகளைப் பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். பொருளாதாரத்தை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றவும், நாட்டை முதலீட்டுக்கு ஏற்றதாக மாற்றவும் முயன்று வருகிறோம்.
நாங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிக்கிறோம். ஒரு புதிய டிஜிட்டல் பரிமாற்ற நிறுவனம் நிறுவப்படும், அதே போல் செயற்கை நுண்ணறிவு (AI)க்கான நிதியம் ஆரம்பிக்கப்படும். விவசாய நவீனமயமாக்கல் திட்டமானது, தற்போதுள்ள விளைநிலங்களுக்கு மேலதிகமாக பத்து ஆண்டுகளில் புதிதாக 500,000 ஏக்கர் நிலத்தில் பயிரிட முடியும். அதில், அதிக விளைச்சல் தரும் விவசாயம் உருவாகும்.
விநியோகச் சங்கிலி மையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் முதலில் இலங்கை மீதான உங்கள் நம்பிக்கை மற்றும் இலங்கையில் மீண்டும் மீண்டும் முதலீடு மற்றும் வெளியில் இருந்து வரும் புதிய முதலீட்டாளர்களைப் பொறுத்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.