மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் விதமாக மதுபான உரிமப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த காலங்களில் முறையான திட்டமிடல் இல்லாமல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் கலவரங்களும் இடையூறுகளும் ஏற்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுபான கடைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இது அரசியல் சூதாட்டமாகும். இது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2022 ஜூலை முதல் தற்போது வரை மது விற்பனைக்கான உரிமப் பத்திரங்களைப் பெற கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான தகவல்களையும், இந்நிறுவனங்களின் பனிப்பாளர்கள் தொடர்பான தகவல்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கோரிக்கைகளின் பிரகாரம் உரிமப் பத்திரம் வழங்கப்பட்டவர்களது விபரங்கள் குறித்தும், இவற்றை வழங்குவதில் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவை எவை என்பது குறித்தும், மதுபான அனுமதிப் பத்திர அரசியல் சூதாட்டத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
மதுபான உரிமம் வைத்திருக்கும் நபர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகளின் வகைகள் மற்றும் அந்த வரிகளை அறவிடும் நிறுவனங்கள், அந்த மதுபான நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டுக்கான வரியை சரியாகச் செலுத்தியுள்ளனவா? இது 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகரிப்பா அல்லது குறைவா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த மதுபான நிறுவனங்கள் வரி செலுத்தாதிருந்தால், செலுத்த வேண்டியுள்ள வரி நிலுவைத் தொகை? இதில் யார் ஈடுபட்டுள்ளனர்? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் பாராளுமன்றத்தில் இன்று(14) கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.