சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்று நிருபங்களுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடுவெல பிரதேச மக்களின் நலன்களை ஆராய்வதற்காகவும், அந்த மக்களுக்கான நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவும் நேற்று(08) கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வெள்ளம் வடிந்ததன் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை பார்வையிட்டதுடன், மக்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு சாகல ரத்நாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அவர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி அவ்வப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வருகிறோம். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை வினைத்திறனாக்க தேவையான தீர்மானங்களை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம் என சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.