இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல் ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை இணைய வேண்டுமா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அறிக்கை இம்மாதம் கிடைக்கப்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
மேலும், இக்காலகட்டத்தில் அரசாங்கம் பாரிய வெற்றிகளை அடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வை வெற்றிகரமாக முடித்தமைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட விடயங்களை நாம் மிகத் துல்லியமாகக் கையாண்டுள்ளோம் என்பதே இதன் மூலம் தெளிவாகின்றது.
அத்துடன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த மாதம் நான் ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளேன். இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், ஜப்பானின் ஆதரவுடன் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மீண்டும் தொடங்கப்படும் என்று ஜப்பான் உறுதியளித்துள்ளது.