இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் 171,100 பரீட்சார்த்திகளுக்காக 1,228 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
மேலைநாட்டு இசை (41) பாடத்திற்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி, செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ள மத்திய நிலையங்களில் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள், அவர்களது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அஞ்சலின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெறப்பட்ட அனுமதி அட்டைகளில் பாடச் சீரமைப்புகள், மொழிச் சீரமைப்புகள் அல்லது பிற சீரமைப்புகள் தேவைப்பட்டால், அவை உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத அதிபர்கள் தங்கள் பாடசாலை இலக்கம், பாடசாலை பெயர், முகவரி மற்றும் தொடர்புடைய விபரங்களை வழங்க வேண்டும்.
அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தங்கள் பெயர், முகவரி, பரீட்சை இலக்கம் மற்றும் பாட விபரங்களை வழங்கி, பரீட்சைகள் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இந்த விடயத்தில் அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல், பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்து அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.