குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன 2025.06.18 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டத்தை திருத்துவதற்கான இச்சட்டமூலம் 2025.04.08 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 2025.05.23ஆம் திகதி இடம்பெற்றதுடன் 2025.06.04ஆம் திகதி மூன்றாவது மதிப்பீட்டையடுத்து இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகின்றது.
2025 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டத்தின் மூலம் சந்தேக நபர்களும் பிரதிவாதிகளும் நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகாமல், தொலைதூரத்திலிருந்தே விசாரணைகளில் பங்கேற்க அனுமதிப்பதன் மூலம் நீதிமன்ற செயல்பாடுகளை நவீனமயமாக்குதல் இடம்பெறுகின்றது.
நீதவான்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பொது சுகாதார அவசரநிலைகள் அல்லது தனிமைப்படுத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் நேரில் ஆஜராவதிலிருந்து விடுவிக்க முடியும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தரணி ஒருவரினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், நேரடியாக வீடியோ அல்லது ஓடியோ ஊடகங்கள் மூலம் இணைந்துகொள்ள முடியும்.
இந்தச் சட்டம் மூலம் சாட்சியாளர்களுக்கு எந்தவொரு இடத்திலிருந்தும் தொலைதூரத்திலிருந்து சாட்சியமளிப்பதற்கு இடமளிக்கிறது. எனினும், முதலாவது நீதிமன்ற வருகை, சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பான வாக்குமூலங்கள் அல்லது உளநலப் பிரச்சினைகளுக்கு தனிநபர்கள் நேரில் ஆஜராக வேண்டும்.
இத்தில் ஆணையாளர்களை நியமித்தல், இனங்காண்பதை உறுதிப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் ஆவணங்கள் உள்ளிட்ட செலவுகளை கையாளுதல் தொலைதூர விசாரணைகளுக்கு நடவடிக்கைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சட்டமூலம் சட்டப் பாதுகாப்புகளைப் பேணும் அதே வேளையில் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.