கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, அந்த திணைக்களத்தின் ஓய்வுபெற்ற உதவி தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் பிரியந்த பண்டார ஈரியகம மற்றும் எழுதுவினைஞர் அத்தரகம கெதர தம்மிக்க நிரோஷன் ஆகியோர் இன்று (01) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சட்டவிரோதமாக 177 வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, சட்டத்திற்கு முரணாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாத மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட டொயோட்டா வகை ஜீப் வாகனத்திற்கு இலக்க தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்ததன் மூலம், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.