மகாபொல நிதியத்திற்குச் சொந்தமான இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) முழுமையான தனியார் நிறுவனமாக மாற்றுவது சட்டவிரோதமானது என்றும், அதனை மகாபொல நிதியத்தினால் நிர்வகிக்கும் நிறுவனமாக மாற்றுவதற்குத் தேவையான சட்டரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அறிவுறுத்தியது.
இதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஈ.விமலேந்திர ராஜா மற்றும் மகாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித மலல்கொட ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.
லலித் அத்துலத்முதலி மகாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கடந்த 09ஆம் திகதி கோப் குழுவில் ஆராயப்பட்டபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அப்போதிருந்த அமைச்சரின் ஒப்புதலுடன் குறித்த சொத்து கையகப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது என்பது குறித்து இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
இதற்காக ரூ 408 மில்லியன் SLIIT நிறுவனத்தினால் மகாபொல நிதியத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், நிதியத்திற்குச் சொந்தமான நிறுவனத்தினால் நிதியத்திற்கு இவ்வாறு நிதியை வழங்கி உரிமையைப் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குரியது என்றும் கோப் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கமைய இதில் தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத அல்லது மோசடியான செயற்பாடுகள் இடம்பெறாது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோப் குழுவின் தலைவல் வலியுறுத்தினார்.