கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று(17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் தொல்பொருள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
எஹெலேபொல வளவின் ஒரு பகுதியாக இருக்கும் மலைநாட்டு இராஜ்ஜியத்தின் கட்டிடக்கலை, பழக்கவழக்கங்கள் மற்றும் கலைகள் இங்கு மெழுகைப் பயன்படுத்தி மீளுருவாக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகள் மாத்திரமன்றி பண்டைய உணவகமும் நிறுவப்பட்டுள்ளன.
வணக்கத்திற்குரிய வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர சங்கராஜ தேரர், வணக்கத்திற்குரிய வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர், மன்னர் விமலதர்மசூரிய , குசுமாசன தேவி, மொனரவில கெப்பட்டிபொல , தேவேந்திர முலாச்சாரி, ஆளுநர் ராபர்ட் பிரவுன்ரிக், எஹெலேபொல மகாதிகாரம், குமாரிஹாமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட வரலாற்றில் முக்கியமான 35 நபர்களின் உயிரோட்டமான மெழுகு உருவங்கள் இங்கு மீளுருவாக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பெருமையையும் கண்ணியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், கண்டிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அருங்காட்சியகமானது மலைநாட்டு இராஜ்ஜியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வரலாற்றை தற்போதைய தலைமுறையினருக்கு துல்லியமாக அறிந்துகொள்ளக் கூடிய இடமாக இருக்கும்.
கம்பளையில் வசிக்கும் அதுல ஹேரத் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளதோடு ஸ்ரீ தலதா மாளிகையின் எஹெலேபொல வளவு அருங்காட்சியக விசேட திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.