ரூபாய் 75 இலட்சம் நிதி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (ஓய்வு) ரொஹான் பிரேமரத்னவின் வீட்டிற்கு, இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான சில ஊடக செய்திகளில், பிரேமரத்னவின் வீட்டிற்குள் அதிகாரிகள் நுழைந்ததாகவும், அவர் தங்கியிருந்த இடங்களை ஆய்வு செய்ததாகவும் கூறப்பட்ட நிலையில், அந்த செய்திகளை மறுத்த அவர், “நான் இன்னும் என் வீட்டிலேயே இருக்கிறேன்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு தெஹிவளை பகுதியில் நைஜீரிய பிரஜைகள் உள்ளிட்ட வெளிநாட்டு குழுவொன்று கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.75 இலட்சம் பணம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழக்கின் ஆதாரமாக களனி வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் ஒப்படைக்கப்பட்டது.
அந்த வேளையில், ரொஹான் பிரேமரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.