முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை அரசாங்கம் இரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் கடும் நடவடிக்கைக்கு தயாராகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
இது தொடர்பாக, ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் (Inter-Parliamentary Union – IPU) முறைப்பாடு பதிவு செய்யப்படும் என சங்கத்தின் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்;
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் முடிவை அமைச்சரவை ஏற்கனவே எடுத்துள்ளது. இது மிக மோசமான, நியாயமற்ற தீர்மானமாகும். பல வயதான முன்னாள் எம்.பிக்கள், மருந்துகளுக்காகவே அந்த ஓய்வூதியத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், அவர்களது வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.”
“ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கே ஓய்வூதியத்தில் நிம்மதி கிடைக்காத சூழ்நிலையில், அதை முழுமையாக நிறுத்துவதால் ஏற்படும் விளைவுகளை அரசு மீளாய்வு செய்ய வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசாங்கம் தங்களது முடிவை திரும்பப் பெறுமா என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.