மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இடையே இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
மருந்துகளின் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு அந்தப் பொறிமுறையை சரிபடுத்தி பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இல்லாமல் மக்களுக்கு மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மருந்து கொள்முதல் செயல்முறை மற்றும் விநியோக பொறிமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் மற்றும் பலவீனங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
சில மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நாட்டில் மீண்டும் இதுபோன்ற நிலைமை ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதற்குத் தேவையான நீண்டகால திட்டங்களை உடனடியாக தயாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மருத்துவமனைகளுக்கு மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நிதி ஏற்கனவே திறைசேரியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டு மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை உறுதி செய்வதில் அனைவரும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.