நாட்டை சீர்குலைக்கும் முயற்சிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டாம்

339

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாம் தவணைத் தொகையை வழங்குவது தொடர்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

வருமானம் ஈட்டும் போது விதிக்கப்பட்ட வரியை நீக்குவது தொடர்பாக மார்ச் 08ஆம், 09 ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் பொருளாதார நிலையை உணர்ந்து அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய சேவைகளை தொழிற்சங்கத் தலைவர்கள் என்ற வகையில் முறையாக நடைமுறைப்படுத்த ஆதரவளிக்குமாறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை சாகல ரத்நாயக்க கேட்டுக் கொண்டார்.

வரி விதிப்பினால் தொழில் வல்லுநர்கள் எதிர்நோக்கும் சிரமத்தை அரசாங்கம் புரிந்து கொண்டு இது குறித்து ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை எதிர்வரும் காலங்களில் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனால் தொழிற்சங்கத் தலைவர்கள் என்ற வகையில் நாட்டை சீர்குலைக்கும் முயற்சிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டாம் என்று கோரிய சாகல ரத்னாயக்க , அவ்வாறு நடந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

மாதாந்த வருமானத்திற்கு விதிக்கப்படும் வரியின் வீதத்தினால் தமது அன்றாடச் செலவுகள் மற்றும் வங்கிக் கடன் தவணைகளை நிர்வகிக்க முடியாதிருப்பதாகவும் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தினால் அந்த நிலைமை மேலும் மோசமடைவதாக சுட்டிக்காட்டிய தொழிற்சங்கத் தலைவர்கள், வருமானத்தின் மீதான வரிவிதிப்பு சதவீதத்தை மீளாய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். .

அத்துடன், அரசாங்கத்தின் வரி கட்டமைப்பில் உள்வாங்கப்படாதவர்கள் இன்னும் பலர் இருப்பதால், அவர்களைக் கண்டுபிடித்து, அவர்களிடம் வரி அறவிடும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டால், அரசாங்கத்திற்கு பெருமளவு வரி வருமானத்தைப் பெற முடியும் எனவும் தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here