பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட தெரிவித்தார்.
அதற்காக ஓய்வூதியச் சட்டம் மற்றும் பிரிவெனாக் கல்விச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கு அவசியமான ஆலோசனைகள் குறித்து ஓய்வூதியத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளின்படி, அமைச்சரவையின் அங்கீகாரம் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட இதனைத் தெரிவித்தார்.
நமது நாட்டில் கலாசாரத்திற்கும் மதத்துக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு உள்ளதாகவும், அரச காலம் முதல் ஒரு கிராமத்தின் தலைவராக அக்கிராமத்தில் உள்ள விகாரையின் பிரதம தேரரே செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய கல்வி அமைச்சு, பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கியதாகவும். அதன் மூலம் பிரிவெனாக் கல்வி மேம்பாட்டுக்காக இயன்றளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
பிரிவெனாக் கல்வியைத் தொடரும் பிக்கு மாணவர்களுக்கு ஏனைய பாடசாலைகளைப் போன்று உள்நாட்டு சாதாரண பாடசாலைப் பாடவிதானங்களும் கற்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், பிக்கு மாணவர்கள் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரங்களில் தேசிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது வெறுமனே பொருளாதார ரீதியிலான பொருள் மற்றும் சேவை தொடர்பான அபிவிருத்தி மாத்திரமன்றி, அந்நாட்டு மக்களின் சமூக, கலாசார, ஒழுக்க மேம்பாடு மற்றும் மானிட முன்னேற்றமே உண்மையில் முழுமையான அபிவிருத்தியாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.