அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை இன்று (31) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகொள்ள புத்த பெருமானின் போதனைகள் மிக முக்கியமானது. அத்தகைய தர்மத்தின் ஆழத்தை அறிந்து அதனை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தேரவாத பௌத்தத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையைச் சார்ந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு நிறுவனத்தில் கற்கும் மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க மாணவர் விடுதியொன்றை நிர்மாணிப்பதற்கான காணியையும் அரச அனுசரணையும் வழங்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாகவும் பௌத்த தர்மம் தொடர்பில் தேடியறிவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு செயற்கை நுண்ணறிவு உதவும். கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான கற்கை நெறிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.
தொழில்நுட்ப யுகம் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நிற்காது. வரலாற்றில் இருந்த அணுகுமுறைகள் இன்று வேறுவிதமாக வளர்ச்சியடைந்துள்ளன. தொழில்நுட்ப யுகத்தின் தேவைக்கேற்ப இலங்கையில் கல்வி முறையை வலுப்படுத்துவோம். அறிவு மற்றும் பண்புமிக்க சமூகத்தின் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.