பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் Meropenem என்ற தடுப்பூசி அவசரகாலத்தில் மருத்துவமனை கட்டமைப்பிலும் மருத்துவ விநியோக கட்டமைப்பிலும் கையிருப்பில் இருக்க வேண்டும். அவரச கொள்முதல் முறையின் மூலம் 450,000 தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டுக்கு முப்பத்தாறு கோடி எண்பத்தி ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு குப்பி ரூ.1075.68 க்கு கிடைத்தும், ரூ.1895.50 க்கு இதை கொள்வனவு செய்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
488,590 தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஏன் அவசர கொள்முதல் செய்யப்பட்டது என்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். இதனால் நாடு நட்டத்தை சந்தித்துள்ளது. எனவே இந்த அவசர கொள்முதல் தொடர்பாக முறையான அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து பதிவுச் சான்றிதழைப் பெற்று, குறுகிய காலத்துக்குள் இந்த விநியோகஸ்தர் அவசர கொள்முதல் மூலம் இந்த மோசடியை செய்திருப்பதால், இது தொடர்பாக அறிக்கையொன்றினை சபையில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.