சிறுபோக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்காக விவசாயக் காணிகளுக்கான நீரை மார்ச் 15ஆம் திகதிக்குப் பின்னர் திறந்துவிடுவது தொடர்பில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கே.டி.லால்காந்த அவர்களின் தலைமையில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
சிறுபோகத்தில் அதிகமான வயல் நிலங்களில் பயிர்ச்செய்கையைத் தொடங்கும் நோக்கில் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் விவசாயக் காணிகளுக்கான நீர் திறக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து நெல் வயல்களிலும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்நாட்டுக்குத் தேவையான சோளம் குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய 2024ஆண்டு முதல் 2025 ஜனவரி 31ஆம் திகதி வரையில் ஏறத்தாழ 275,000 மெற்றிக்டொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், ஜனவரி 31ஆம் திகதிக்குப் பின்னர் சோளம் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இருந்தபோதும், 6 இலட்சம் மெற்றிக்டொன் சோளத்திற்கான தேவை இருக்கின்றபோதும், அந்தளவு சோளத்தை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கமைய, இடைநிறுத்தப்பட்ட சோள இறக்குமதியை எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் சோளத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் அவசியம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. நாட்டில் சோள உற்பத்தி செய்யப்படும் காணிகளின் அளவை இருபதாயிரம் ஹெக்டெயராக அதிகரிக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது.