இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் குறித்து நேற்றையதினம் (17) கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் ஆராயப்பட்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் இக்குழு நேற்று (17) பாராளுமன்றத்தில் கூடிய போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் வலுசக்தி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த சட்டமூலத்தை திருத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் சில தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் சில விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த சட்டமூலம் தொடர்பில் குழுவில் கருத்துக்களை முன்வைத்தனர். ஏற்கனவே குழுவில் இணங்கிக் கொண்டதற்கு அமைய திருத்தங்களுடன் குறித்த சட்டமூலம் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டது.
புதிய சட்டமூலத்திற்கு அமைய காணியின் உரிமை, வாடிக்கையாளர்களின் உரிமை போன்ற பல விடயங்கள் குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வாடிக்கையாளர்களின் உரிமைகள் தொடர்பான ஒழுங்குவிதிகளைத் தயாரிக்க ஒருமாத காலத்திற்குள் வலுசக்தி அமைச்சு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு குழு அறிவுறுத்தல் வழங்கியது.