புதிய கல்விக் கொள்கை தயாரிப்பு : இலங்கைச் சட்டத்தை ஒரு பாடமாக உள்வாங்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

499

நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாக சபை முதல்வர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறைக்கு உரிய நடைமுறையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சட்டத்தை ஒரு பாடமாக பாடசாலைப் பாடத்திட்டத்தில் உள்வாங்குவதற்கான தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை 02 வாரங்களுக்குள் உபகுழுவிடம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. சட்டத்தை தனியானதொரு பாடமாக அல்லாது குடியியல் கல்வியில் ஒரு பகுதியாக உள்வாங்கப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பிலும் அதில் விடயங்கள் உள்ளடக்கப்படுவது முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்தார். சட்டத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் காணப்படும் உறவு இதில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்குவதற்கு உரிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. 60,000 பட்டதாரிகளில் 18,000 பேர் ஏற்கனவே பாடசாலைகளில் இணைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கு தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள நடைமுறை குழப்பம் நிறைந்தது என பாராளுமன்ற உறுப்பினர்கள் இக்குழுவில் சுட்டிக்காட்டினர். ஏற்கனவே, பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள சில பட்டதாரிகள் இது தொடர்பில் விருப்பம் தெரிவிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இங்கு தெரிவித்தார்.
ஆசிரியர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு உரிய வேலைத்திட்ட நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here