பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பாராளுமன்ற சட்டவாக்க செயன்முறையின் கண்ணோட்டம்’ எனும் தொனிப்பொருளிலான நிகழ்ச்சி இலங்கை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
சபை அலுவல்கள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் தெளிவை ஏற்படுத்தும் பொருட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க, சட்டவாக்க சேவைகள் திணைக்களப் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வா மற்றும் உதவிப் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா ஆகியோருடன் இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலின் போது மாணவர்களுக்கு பாராளுமன்ற முறைமைகள் பற்றிக் கற்றுக்கொள்வதற்கும் தமது கேள்விகளை முன்வைப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பாராளுமன்ற விவகாரங்கள், நிலையியற் கட்டளைகள், சட்டவாக்க செயன்முறை போன்ற பல துறைகளை திறந்த கலந்துரையாடல் உள்ளடக்கியிருந்தது. அதனை அடுத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.