கூட்டு முயற்சிக்கான சிறந்த சாட்சி ஹெம்மாதகம நீர் வழங்கல் திட்டம்

356

கூட்டு முயற்சிக்கான சிறந்த சாட்சியாக ஹெம்மாதகம நீர் வழங்கல் திட்டம் அமைந்துள்ளதாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் ஆர். டெமெட் செகர்சியோக்லு (R.Demet Sekercioglu) தெரிவித்தார்.

இலங்கை மக்களின் இயல்பு வாழ்வை கட்டியெழுப்புவதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் தனித்துவமான மைல்கல்லாக அமைந்துள்ள இந்தத் திட்டம் அமைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தூதுவர், ஆயிரக்கணக்கான மக்களின் தாகத்தைத் தணித்தல், சுகாதாரத்தைப் பாதுகாத்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட கூட்டு முயற்சி இது எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட ஹெம்மாதகம நீர் வழங்கல் திட்டத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே துருக்கி நாட்டுத் தூதுவர் ஆர். டெமெட் செகர்சியோக்லு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்ட அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கணை பிரதேச செயலகத்தை சேர்ந்த 135 கிராம உத்தயோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழும், நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா கடனுதவியின் கீழும் இந்த நீர்த்திட்டம் முன்னெடுக்கப்படுவதோடு துருக்கி அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு ஆலோசனை ஆதரவு வழங்கியது.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை அதிகாரிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், இந்த மாபெரும் திட்டத்தை நனவாக்குவதற்கு புகழ்பெற்ற ரோனேசன் ஹோல்டிங்கிற்குச் சொந்தமான புகழ்பெற்ற நிறுவனமான Ballast Nedam நிறுவனம் ஆற்றிய முக்கிய பங்களிப்பைப் பாராட்டினார். விசேட தரம் மற்றும் நீடித்த பெறுமதியை வழங்க இந்த கூட்டு முயற்சியினால் முடிந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது இலங்கை பங்காளிகளுடன் இணைந்து செயற்திட்டத்தின் முழுவதிலும் விசேட தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்திய துருக்கிய பொறியியல் குழுவிற்கும் தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

குறிப்பாக கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக திட்டத்தை சரியான நேரத்தில் முடிப்பதில் சவால்களை எதிர்கொண்ட போதும் அவர்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையுடன் செயற்பட்டதை அவர் பாராட்டினார்.

இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூலம் மேலும் பல துருக்கிய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பங்காளிகள் இலங்கையின் அபிவிருத்திப் பயணத்தில் தீவிரமாக பங்குபற்றுவதற்கு ஊக்கமளிக்கும் என்றும் தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஹெம்மாதகம நீர் வழங்கல் திட்டம் துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது மட்டுமன்றி, இலங்கை மக்களின் வாழ்வை வளப்படுத்தும் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here