அரச பொறிமுறையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என வெளிப்படையான மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சிவில் அமைப்புக்கள் மத்தியில் தெரிவித்தது.
அந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தலைமையில் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடுவதற்கு கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
அரச சேவையில் பொறுப்பேற்றல் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அதனால் அரச சொத்துக்கள் பாரியளவு வீணாகுவதாக சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகையில், அரச பொறிமுறையில் இடம்பெறும் விடயங்களில் அரசியல்வாதிகள் நேரடியாக பொதுமக்களுக்கு வெளிப்படுகின்ற போதிலும் அரச அதிகாரிகள் இவ்வாறு வெளிப்படுவதில்லை எனக் குறிப்பிட்டனர்.