விலங்குகளுக்குக்கூட பயன்படுத்தாத இயந்திர சாதனங்களை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளனர்

255

ஒவ்வொரு ஆண்டும் 30,000 புற்றுநோயாளிகள் உருவாகின்றனர் என்றும், அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது செலவு குறைந்த முறையாகும் என்றும், லினாக்(நேரியல் முடுக்கி) என்ற சாதனம் இதற்குப் பயன்படுத்தப்பட்டாலும், கோபால்ட்(Cobalt Therapy) கதிர்வீச்சு சிகிச்சை அலகு சாதனமே நமது நாட்டில் பயன்படுத்தப்படுவதாகவும், வெளிநாடுகளில் உள்ள விலங்குகளின் புற்றுநோய்க்கு கூட இது பயன்படுத்தப்படுவதில்லை என்பதனால் இந்த லினாக் இயந்திர சாதனத்தை பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (4) பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி மற்றும் கராப்பிட்டிய ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இந்த சாதன அலகுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பதுளை, இரத்தினபுரி, குருநாகல், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இரண்டாம் கட்டமாக இந்த சாதன அலகுகளை வழங்குவதற்கு 2 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும், சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் கோபால்ட் சாதனங்களை தொடர்ந்தும் பயன்படுத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக, ஒரு லினாக் இயந்திரத்தின் விலையில் பாதி செலவிடப்பட்டு, காலாவதியான, வெளிநாடுகளில் விலங்குகளுக்குக்கூட பயன்படுத்தாத இயந்திர சாதன அலகுகளை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளனர் என்றும், இந்த காலாவதியான இயந்திர சாதனங்களுக்குப் பதிலாக லினாக் இயந்திர சாதன அலகுகளை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.

இந்தியாவில் இருந்து பெனசியா என்ற கதிர்வீச்சு இயந்திரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றாலும், இந்த இயந்திர சாதன அலகுகள் இந்தியாவில் கூட பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here