எதிர்காலத்தில் நாட்டிற்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய திறமையானவர்கள் குழுவொன்று மாணவர் பாராளுமன்றங்கள் ஊடாக உருவாகி வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
குருநாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றும் போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.
குருநாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண கூட்டம் இன்று (30) பழைய பாராளுமன்றமான தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
குருநாகல் மாவட்டத்தின் எதிர்காலத்தை வழிநடத்திச் செல்வதற்கும் அதற்குத் தலைமை தாங்கவும் அதற்காக அமைச்சர் பதவிகளை வகிக்கவும் ஒரு குழு தயாராகி வருவதை உங்கள் மூலம் நான் காண்கிறேன். எதிர்காலத்தில் குருநாகல் மாவட்டத்தின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று நாட்டை வழிநடத்த உங்களுக்கு பலமும் தைரியமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
குருநாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தில் பிரதான உரை நிகழ்த்திய பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக எதிர்காலத்தில் திறமையான தலைவர்களை உருவாக்க பெரும் வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.