குடும்ப வன்முறைகளைத் தீர்ப்பதற்கான புதிய சட்டம்

283

தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

அதேநேரம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, ஒரு வாரத்திற்குள் அந்த அவதானிப்புகளை பரிசீலிக்க இலங்கையின் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அதில் திருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் சார்பில் அவருக்கு நெருக்கமான ஒருவர் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, நடைமுறையிலிருக்கும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமாக பாராளுமன்றத்தில் சமர்பிக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களுக்கான 11 தற்காலிக தடுப்பு நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதோடு, வர்தமானியில் அறிவிப்பதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்களுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.” என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here